இளைய சமுதாயத்தினரும் தொழில்நுட்ப சாதனங்களும் – பெற்றோர் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்

பாதுகாப்பான கணினி மற்றும் இணையப்பாவனை – இலவசக்கருத்தரங்கு

safe internet

இளைஞர் சமூகத்தினரிடையே நிலவி வரும் தொழில்நுட்ப சாதன மோகமானது தவிர்க்கமுடியாத ஒன்றாகக் காணப்படுவதோடு பெற்றோர் மத்தியில் பல விதமான கருத்துவேறுபாடுகளும் நிலவுகின்றன. தற்போது சிறுவர் முதற்கொண்டு பள்ளிப்பருவத்தினர் ஈறாக அனைவரிடையேயும் இந்த மோகம் நிலவுக்கின்றமை கண்கூடாகும். இந்த மோகம் பெருமளவில் நிலவுகின்றமைக்கு தலைமுறை இடைவெளி எனப்படுகின்ற Generation Gap உம் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது.

பள்ளி செல்லும் மாணவன் ஒருவன் கணணிப்பயன்பாடு பற்றி வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கலந்துரையாடும் போது பெரும்பாலாக கிடைக்கின்ற பதில் “இந்த வயதில் எதற்கு?” என்கின்ற அசண்டையீனமான கேள்வியாகவே உள்ளது. அதனை மீறி சில முற்போக்கான பெற்றோர் வீட்டிலேயே கணணிப்பயன்பாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்த போதிலும் மாணவரிடையே அதன் பயன்பாடு அவர்களது வயதிற்குப் பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள பொருத்தமான உத்திகள் பெற்றோரினால் மேற்கொள்ளப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் பாதுகாப்பான கணினிப்பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிலையும் மாணவர்களிடையே  ஓரளவு தாழ்ந்ததாகவே காணப்படுகிறது.

“சீரான கல்விக்கான கணினிப்பயன்பாடு” எனும் மனஉரு நமது  மாணவர்களிடையே உயர்தர வகுப்பு நிலையிலேயே சீராக உள்வாங்கப்படுகின்ற போதிலும் கணணி விழையாட்டுகளில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் உலாவருதல் ஆகியன முன்பள்ளி நிலையிலேயே மாணவர் மத்தியில் விதைக்கப்படுகின்றன. இதற்கு பெற்றோராகிய எம்மிடையே ஏற்பட்டுள்ள வலுவான தொழில்நுட்பப் போதை மற்றும் ஸ்மார்ட் தொலைபேசி மோகமும் ஒரு காரணமாகும். மூத்தவர்களின் தொழில்நுட்ப சாதனப் பயன்பாட்டை கூர்ந்து அவதானிக்கும் தன்னார்வம் கொண்ட சிறுவயதினர் தாமும் அதனைப் பயன்படுத்த எத்தனிக்கின்றமை பிள்ளைகளின் வளர்ச்சிப்படிநிலையின் இயல்பான அம்சமே தவிர மறுக்கப்பட்டு கண்டிக்கப்படவேண்டிய ஒரு விடயமல்ல. ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் மடிக்கணணியை மூத்த சகோதரர், பெற்றோர் மற்றும் நண்பர்கள் பயன்படுத்துவதை கவனிக்கும் மாணவர்கள் தாமும் அதனை பயன்படுத்த எத்தனிக்கும் போது தமக்கு இலகுவானதும் ஏதுவானதுமான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றமையும் ஏனைய காணொளி சித்திரங்களை மணித்தியாலக்கணக்கில் தொடர்ந்து பார்க்கின்றமையும் நாம் கண்கூடாக பார்க்கின்ற செயற்பாடுகளாகும்.

இவ்வாறாக வருங்கால தலைமுறையினருமான இளைய சமுதாயத்தினர் தடம்புரண்டு செல்வதையும் வினைத்திறன் அற்ற முறையில் தொழிநுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுவதையும் தவிர்த்து இளம் சமூகத்தினரை நல்வழிப்படுத்தி கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதுவான முறையில் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தும் உத்திகளை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தும் இலவச கருத்தரங்கு ஒன்றினை Technobrain International (Pvt) Ltd நிறுவனமானது தமது கூட்டாண்மை சமூகப்பொறுப்பு (Corporate Social Responsibility) அம்சங்களுள் ஒன்றாக எடுத்து நடத்த முன்வந்துள்ளது. இந்த இலவசக்கருத்தரங்கானது பாடசாலை மாணவர்களை இலக்காகக்கொண்டு விடுமுறைகாலத்தில் நடாத்தப்பட உள்ளது. இது எதிர்வரும் 10 ஆம் திகதி (10.04.2018) Technobrain International (Pvt) Ltd   நிறுவனத்தினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற உள்ளது. இவ்வாறானதொரு செயற்பாடானது நமது மட்டக்களப்பு மாணவரிடையே பாரியதொரு அணுகுமுறை மாற்றமொன்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply